போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – அரசு எச்சரிக்கை!

353 0

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 
இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.

அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28ம் தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a comment