பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பேஸ்புக்கில் அவதூறாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ் புக்கில் அவதூறாக கருத்துகளை வெளியிட்ட ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-
நாகை மாவட்டம் சீர்காழி ஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் பாலு (வயது 48). இவர் ம.தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பிரதமர் மோடி இன்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேக் புக்கில் அவதூறாக கருத்துகளை நேற்று வெளியிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த சீர்காழி பா.ஜனதா நகர தலைவர் செல்வம் தலைமையில் இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிசத் , இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து ம.தி.மு.க. நகர செயலாளர் சத்தியராஜ் பாலுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது அவதூறு தகவல் பரப்புவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை விமர்சித்த ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.