நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் நவாஸ் செரீப் வக்கீல் கவாஜா ஹாரீஸ் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற உள்ளது. எனினும் “நவாஸ்செரீப்பின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.