தமிழக ஆசிரியர் சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருதை 2-ம் முறையாக பெற்று சாதனை

304 0

கால்குலேட்டரை மிஞ்சும் பாரம்பரிய கற்பித்தல் முறையை கையாண்டு வேத கணிதத்தின் மூலம் சீனாவையே தமிழக ஆசிரியர் ஒருவர் கவர்ந்து வருகிறார்.

கால்குலேட்டரை மிஞ்சும் பாரம்பரிய கற்பித்தல் முறையை கையாண்டு வேத கணிதத்தின் மூலம் சீனாவையே தமிழக ஆசிரியர் ஒருவர் கவர்ந்து வருகிறார். சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருதை 2-ம் முறையாக பெற்று சாதனை படைத்து உள்ளார்.
சீனாவின் கல்வி முறைகளில் இந்தியாவின் பாரம்பரிய அணுகுமுறைகளை கையாண்டு வேத கணிதத்தின் மூலம் ஒட்டுமொத்த சீனாவையே கவர்ந்து வருகிறார், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஐசக் தேவகுமார்.
ஈரோட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஐசக்-சரோஜா தம்பதியின் மகன் தேவகுமார் (வயது 38). பள்ளிப்படிப்பை முடித்த ஐசக் தேவகுமார், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படித்தார். அதுதான் அவரது வாழ்வின் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அந்த காலமே கணிதத்தின் மீதான காதலை அவருக்குள் ஆழமாக புகுத்தியது.
பல வித்தியாசமான வழி முறைகளில் கணக்குகளை போட்டு பார்க்க தொடங்கினார். அப்படி அவர் தேர்ந் தெடுத்த முறைதான் வேத கணித முறை. இந்தியாவின் பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் ஒன்றாக வேத கணித முறையை, அவர் கையாண்ட விதமே அவரை இன்று சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது.
ஐசக்கின் வேத கணித முறையின் தாக்கமே, அவருக்கு சீனாவில் வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்கிறது. மேலும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் எனும் விருதும் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்து ஆசிரியர் ஐசக் தேவகுமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
வேத கணிதம், கணக்குகளை எளிதில் புரிந்துகொள்ளவும், விரைவாக தீர்வு காணவும் உதவும் இந்தியாவின் மிக பழமையான கணித முறை. எப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த கணக்குகளாக இருந்தாலும், அவைகளுக்கு இம்முறையில் எளிதில் தீர்வு கண்டுவிடலாம். ஒரு பெருக்கல் கணக்கு என்றால் அதற்கு 5 படிகள் கடப்பதற்கு பதில், இதில் ஒரே படியில் தீர்வு கண்டுவிடலாம்.
அற்புதமான அந்த வேத கணக்கு முறையில் எனது ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினேன். இளங்கலை, முதுகலை, பி.எட். பட்டப்படிப்புகள் முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியர் ஆனேன். இந்தநிலையில் சீனாவில் உள்ள பழமையான அரசு பள்ளிக்கூடத்துக்கு கணக்கு ஆசிரியர் தேவை என்ற விளம்பரம் என் கண்ணில் பட்டது. எனக்கு ஆங்கிலம்தான் தெரியும். சீன மொழி தெரியாது. இருந்தாலும் நம்பிக்கையுடன் விண்ணப்பித்தேன். எனது திறமைகளை சல்லடையாக சலித்து பார்த்து என்னை தேர்வு செய்தனர். அதன்படி சீனாவில் சிஸ்வான் மாகாணம் சென்ங்டு பகுதியில் உள்ள ‘ஷிஷி’ அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது.
மொழி தெரியாத நாட்டில், பழமையான ஒரு அரசுப்பள்ளியில் எனக்கு கை கொடுத்தது வேத கணித முறைதான். அதுவரை மிகப்பெரிய வழிமுறைகளில், பல்வேறு படிகளை கடந்து கணக்குக்கான விடையை கண்டுபிடித்து வந்த சீன மாணவர்கள், என்னால் ஒரு சில படிகளிலேயே தீர்வு கிடைத்ததும் ஆர்வத்தோடு கற்க தொடங்கினார்கள். குறும்புமிக்க மாணவர்கள் கூட கணக்கில் ஆர்வம் செலுத்தினார்கள். இதனால் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராக பெருமையுடன் வலம் வந்தேன்.
இந்தநிலையில் எனது திறமைகளை கண்டு வியந்த பள்ளி நிர்வாகம், அரசுக்கு ‘சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருது’க்காக என் பெயரை பரிந்துரை செய்தது. சீன நாட்டின் கல்விக்குழுவினரும் என்னை சந்தித்து பல கட்டங்களாக தேர்வு நடத்தினார்கள். எனது கணித திறன், பாடம் எடுக்கும் அணுகுமுறைகளை குறிப்பெடுத்தனர்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு செல்ல விரும்பி, அதற்காக படிக்கும் மாணவர்களுக்கு நான் எடுக்கும் நுண்கணித வகுப்பையும், கால்குலேட்டரை மிஞ்சும் இந்தியாவின் பாரம்பரிய கற்பித்தல் முறையையும் வெகுவாகவே ரசித்தார்கள். மற்றவர் களை ஒப்பிடுகையில் எனது தரம் சிறப்பானதாக உள்ளதாக, 2016-ம் ஆண்டுக்கான ‘சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருது’, எனக்கு கிடைத்தது. இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் நான் தான்.
தற்போது 2017-ம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருதும் எனக்கே கிடைத்திருக்கிறது. இதனால் சீனாவில் என்னை எல்லோரும் பெருமையோடு பார்க்கிறார்கள். இந்தியாவில் எப்படி மருத்துவரை கடவுளாக பார்க்கிறார்களோ, அதுபோல சீனாவில் ஆசிரியர்களை கடவுளாகவே பார்க்கிறார்கள். அப்படி என்னை சந்தித்து சீனா முறையில் (தலையை குனிந்து) வணக்கம் தெரிவிப்போருக்கு, நான் கைக்கூப்பி இந்திய முறையில் வணக்கம் தெரிவிக்கிறேன். என்னை பார்த்து சீனாவை சேர்ந்த ஏராளமானோர் தற்போது கைகூப்பி வணக்கம் சொல்லுகிறார்கள்.
எனது ஒரே ஆசை என்னவென்றால், இந்தியாவிலும் கல்வி நிறுவனங்களில் வேத கணித முறை சொல்லி கொடுக்கப்பட வேண்டும். சீனா மாணவர்களே ஆர்வத்துடன் கற்று சிறந்து விளங்கும்போது, இந்திய நாட்டின் மாணவர்களும் அதில் சாதிக்க முடியும். இதன்மூலம் 3 மணி நேரம் எழுதும் கணித தேர்வை, ஒரு மணி நேரத்திலேயே எழுதிட முடியும்.
மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றார் அப்துல்கலாம். எனவே மாணவர்களுக்கு வேத கணித முறையை ஊக்குவிப்பதின் மூலம் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய மாணவர்கள் விளங்க முடியும். நாடு வல்லரசாக மாறுவதற்கு ஒரு அடித்தளமாகவும் அது அமையும். இந்தியரின் பெருமையும், நமது பாரம்பரிய கணித முறையும் பெருமை கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment