மதுரையில் ரூ.1,264 கோடி செலவில் அமைய இருக்கும் ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

276 0

மதுரையில் ரூ.1,264 கோடி செலவில் அமைய இருக்கும் ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி) அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனை ஏற்று மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக அவர், டெல்லியில் இருந்து நாளை காலையில் தனி விமானத்தில் மதுரை புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்டேலா நகருக்கு வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் இதே விழாவில் மதுரை, நெல்லை, தஞ்சையில் கட்டப்பட்டுள்ள ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அந்த விழா முடிந்ததும், அதன் அருகே நடைபெறும் பாரதீய ஜனதா மண்டல மாநாட்டுக்கு 12.05 மணிக்கு வந்து மோடி கலந்துகொள்கிறார். இதில் 10 நாடாளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் பேசும் பிரதமர் மோடி, பின்னர் 12.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று, கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

Leave a comment