உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதே பிரியங்காவின் இலக்கு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதியில் 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். இந்த சமயத்தில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி நேரடியாக அரசியல் களத்தில் இறக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேச மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் ராகுல்காந்தி கூறியதாவது:-
பிரியங்காவுக்கும், சிந்தியாவுக்கும் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன். அடுத்து இங்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவது தான் அது. குஜராத்தோ, உத்தரபிரதேசமோ, தமிழ்நாடோ அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் முழுசக்தியுடன் முன்னணியில் இருந்து போராடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அரசை நீங்கள் பார்ப்பீர்கள்.
நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் எந்த பின்னடைவும் இன்றி முழுசக்தியுடன் போட்டியிடும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.