இந்தியாவின் தேவைக்கே மாகாணசபை முறைமை இலங்கைக்கு திணிக்கப்பட்டது. மாகாணசபை முறைமை வேண்டுமா இல்லையா என்பதை பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும். ஆனால் மாகாணசபை இயங்க வேண்டும் என்றால் மாகாணசபைக்கான முழுமையான அதிகாரங்களை கொடுத்து சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக மைத்திரி, மஹிந்த, சந்திரிக்கா ஆகிய மூவரும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். அதற்கான மக்கள் ஆணையும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாணசபை தேர்தலை நடத்தக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது ஒரு வருட காலமாக தாமதிக்கப்பட்டு வருகின்றது. நாங்களும் விருப்பு வாக்கு இல்லாத முறைக்கு செல்வதற்கே விரும்புகின்றோம். அந்த முறையில் தேர்தலொன்றும் நடத்தப்பட்டது. அதில் பிரச்சினைகள் சில உருவாகின. இந்நிலையில் புதிய முறைமையில் நடத்துவதென்றால் தேர்தலுக்கு காலமெடுக்கும்.