அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.
குறித்த அறிக்கை இன்று மாலை அந்தக் குழுவினால் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.
சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் சிசிடிவி காட்சிகள் வௌியானது சம்பந்தமாகவும் அந்தக் குழுவால் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர இது சம்பந்தமாக விசாரணை செய்த சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த இரு அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.