இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று (25) சிங்கப்பூரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, பூகோளத்தின் ஒட்டுமொத்த உயிரினங்களையும் நிலையாக பேணும் பொறுப்பு மனிதனுக்குரியது என்பதை பௌத்த மதத்தை பின்பற்றி வருபவன் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். மனிதன் தான் வாழ்வதற்கு பொருத்தமான சூழலை கட்டியெழுப்பவும் சூழல் நேயமான முறையில் உலகளாவிய பொருளாதாரத்தை வழிநடத்துவதும் இன்று எமது முதன்மை பொறுப்புகளாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடலுக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் பிராந்திய ஒத்துழைப்பினை விருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பெருமைமிகு விவசாய பொருளாதார நாகரீகத்துடன்கூடிய தேசம் என்ற வகையில் இலங்கை சுற்றாடல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், உணவு வீண்விரயமாவதை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுதல் தொடர்பான முன்மொழிவொன்றையும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் முன்வைத்தார்.
பேண்தகு பசுமை தொழிற்துறையை பலப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பொன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவி அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காலநிலை மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு தமது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடியவாறு நிதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
காலத்திற்கு உகந்தவாறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுற்றாடல் சமவாயத்தினை திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடல் சமவாயத்தின் கீழ் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளை பலப்படுத்தும் முறையான திட்டம் தொடர்பிலும் ஆலோசனைகளை முன்வைத்தார்.
அத்தோடு சூழல் கட்டமைப்பினை விசேடமாக ஈர நிலங்களை இரசாயன கழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையினால் நிறைவேற்றப்படும் விசேட செயற்பணிகள் தொடர்பில் விளக்கமளித்தார். கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக உலகளாவிய ரீதியில் பரிபூரண செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றையும் ஜனாதிபதி இதன்போது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்விற்காக முன்வைத்தார்.
பூகோள வெப்பமாதலின் பாதிப்புகளின் மத்தியிலும் இலங்கை பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வளத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதென்பதை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இது சுற்றாடல் மாற்றங்களின் தாக்கங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்பதையும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவன தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனயின் தலைமையில் இன்று (25) முற்பகல் சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் ஆரம்பமானது.
“சுற்றாடல் சவால்கள், பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்திக்கான செயற்திறன்மிக்க தீர்வுகள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அந்நாடுகளின் சுற்றாடல் அமைச்சர்களும் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
மாநாட்டு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சிங்கப்பூர் பிரதி பிரதமர் Teo Chee Hean, துவாலு நாட்டின் பிரதமர் Enele Sosene Sopoaga ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
சுற்றாடலை பாதுகாப்பதற்காக விசேட அர்ப்பணிப்புடன் செயற்படும் சுற்றாடல் சார்ந்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ள அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி அவர்களின் உரை மாநாட்டில் கலந்துகொண்டவர்களது விசேட கவனத்திற்குள்ளாகியது.