அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு விவகாரம்

366 0

201610010829579914_issue-of-unauthorized-housing-register-supreme-court-refuses_secvpfஅங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வது குறித்த சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளைநிலங்கள் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் விளை நிலங்கள் குறைந்து, விவசாயமும் பாதித்து இருக்கிறது. எனவே, விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் 9-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் ‘விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது, அந்த நிலத்தையோ அல்லது அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவு குறித்து, அனைத்து பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளுக்கும், பத்திரப்பதிவுத்துறை (ஐ.ஜி.) தலைவர் சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்றும் கூறி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்தநிலையில் அகில இந்திய ரியால்டர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய ரியல் எஸ்டேட் வணிகர்கள் நல சங்கம் உள்ளிட்டோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரிமா சுந்தரம், கே.வி.விஸ்வநாதன், ஜி.உமாபதி ஆகியோர் ஆஜரானார்கள்.

அவர்கள் வாதிட்டதாவது:-ஐகோர்ட்டு உத்தரவு வருவதற்கு முன்பே, லட்சக்கணக்கானோர், வீட்டு மனைகளை வாங்கி, பட்டா, சிட்டா, அடங்கல் பெற்றுள்ளனர். நஞ்சை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றி விற்கப்படவில்லை. தரிசு நிலத்தையே, ‘லே அவுட்’களாக மாற்றி, வீட்டு மனைகளாக விற்கப்பட்டுள்ளது. லே அவுட்களுக்கு தேவையான, அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், வீட்டுமனைகளை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. முதலீடு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. எனவே, ஏற்கனவே உள்ள லே அவுட்டில், விற்கப்படாத வீட்டுமனைகளை விற்பதற்கு ஏதுவாக, சென்னை ஐகோர்ட்டின் இடைக்காலத் தடையை நீக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். மீண்டும் சென்னை ஐகோர்ட்டையே அணுகுமாறும் அறிவுறுத்தினர்.  இதைத்தொடர்ந்து மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.