தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உள்ளாட்சித்தேர்தல் குறித்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?
பதில்:- உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ளது. அதாவது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தி.மு.க. தடை உத்தரவு கேட்டது போலவும் அதை உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது போலவும், சில ஊடகங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சொல்லி வருகிறார்கள். அது தவறு.
நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை உத்தரவு கேட்கவேயில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும், மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும், வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் சாராம்சம். அதைத்தான் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு இருக்கிறோம். அதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 6-ம் தேதியன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது, என்பது தான் உண்மையான நிலவரம்.
கேள்வி:- உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எப்போது தொடங்கப்படும்?
பதில்:- வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, தலைமையுடன் கலந்து பேசி, எந்தவிதமான வியூகம் அமைத்து, எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்பதையெல்லாம் விரைவில் அறிவிப்போம்.
கேள்வி:- முதல்-அமைச்சர் உடல் நிலை குறித்து தி.மு.க. தலைவர் அறிக்கை வெளியிட்டு உள்ளாரே?
பதில்:- இதில் கவர்னர் தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளன. முதல்-அமைச்சர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றால், தலைமைச்செயலாளரோ அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி கொடுத்தால் நாட்டில் எழக்கூடிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்ற அடிப்படையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.