மத்திய அரசு மேற்கொண்டுவந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை ஈடுபட்டு இருந்த மத்திய அரசு, இந்த பணியை தற்போது மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது. மாநில அரசின் இ-சேவை மையங்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் இந்த பணி நடக்க இருக்கிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு (98.10 சதவீதம்) பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு (89.83 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.