பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி பிரியங்காவை களத்தில் இறக்கி இருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை நினைத்தும் அதன் தலைவரை பார்த்தும் அந்த கட்சி தொண்டர்கள்தான் பரிதாபப்பட வேண்டும். பிரியங்கா தேர்தல் களத்துக்கு வருவது இதுபுதிதல்ல. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பிரசாரத்துக்கு களம் இறக்கி பரிசோதித்து பார்த்து தோல்வி கண்டவர்கள்தான்.
பிரியங்கா வருகையை கொண்டாடும் காங்கிரசார் ராகுலின் தோல்வியையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று பிரதமர் வேட்பாளராகவும் முன் நிறுத்தப்பட்டவர்.
அவர் மீது அவரது கட்சிக்காரர்களுக்கும் நம்பிக்கை இல்லை. கூட்டணி கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை. அவ்வளவு ஏன் ராகுலுக்கே தன் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் பிரியங்காவையாவது இறக்கி பார்ப்போம் என்று முயற்சிக்கிறார்.
ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் எடுபடப்போவதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமே இந்த நாட்டை ஆள முடியும் என்ற நிலை இருந்தது. சாமானியனும் ஆள முடியும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது. மோடியால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு குடும்பத்தின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்புவார்களா? காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா வருகையை கொண்டாடலாம். மக்கள் கொண்டாட மாட்டார்கள்.
பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும். மோடியை கண்டு பயந்து பிரியங்காவை கொண்டு வந்திருப்பவர்கள் மோடி பயந்துவிட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் மக்கள் ரசித்து பார்க்கும் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று. இவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டாளியும் ஏற்றுக்காள்ளவில்லை.
மீண்டும் இந்திரா வந்து விட்டதாக வாழ்த்துப்பாடும் தமிழக அரசியல் தலைவர்கள் மீண்டும் நெருக்கடி நிலை வரவேண்டும் என்று வரவேற்பார்களா? எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அந்தர் பல்டி அடிக்கும் கட்சிகள் நடத்தும் காட்சிகளை மக்கள் பார்த்து சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.