தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 2வது நாளாக மறியல்

268 0

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு திரண்டு சிறிது நேரம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போல சென்னையிலும் அரசு அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இன்று கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு நேற்று தடைவிதித்தது. 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தை தொடர்வதா? கைவிட்டு விட்டு பணிக்கு திரும்புவதா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது. 

Leave a comment