போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டிருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். பிரியங்கா இப்போது அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இந்திரா காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார்.
ராகுல் காந்திக்கு பக்க பலமாக பிரியங்கா இருப்பார். பிரியங்காவுக்கு பதவி வழங்கியதால் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பிரியங்காவை குடும்ப வாரிசு, திடீரென்று அரசியலுக்கு வந்து விட்டார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் பா.ஜனதாவில் சீரியல், சினிமா நடிகைகளான ஸ்மிரிதிஇரானி, ஹேமமாலினி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் சாமுவேல் தனக்கு கிடைத்த தகவலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே மேத்யூஸ், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமண் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு அவரை நீக்கினார்கள். அதேபோல் மேத்யூஸ், எடப்பாடி பழனிசாமி மீது சொல்லி இருக்கும் ஆதாரங்களை வைத்து அவரை கவர்னர் ஏன் பதவி விலக சொல்லவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர்களை அழைத்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.