அனுமதியின்றி கம்பங்கள் நாட்டினால் உடனடியாக அகற்றப்படும்-இம்மானுவல் ஆனோல்ட்

275 0

கம்பங்கள் நடுவதற்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி எடுத்த பின்னே நாட்டமுடியும் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் சபையின் ஆரம்பத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ சபையின் அனுமதியின்றி கம்பங்களை எந்தவொரு தனியார் நிறுவனமும் நாட்டமுடியாது. அதில் எந்தவகையான கேபிள் இணைப்பு சேவை நிறுவனமானாலும் முறைப்படி விண்ணப்பித்து சபையின் ஆராய்விற்குப் பின்னர் மக்களிற்கு பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

அவ்வாறான பரிசீலனையின் பின்பு சபைக்குரிய வரியினைச் செலுத்தி முறைப்படியான அனுமதியினைப் பெற்றபின்பே கம்பங்கள் நாட்ட முடியும். 

எனவே அனுமதி இன்றி நாட்டிய எந்த நிறுவனமானாலும் உடன் மாநகர சபையுடன் உரிய முறையில் தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நிறுவனத்தை உறுதி செய்ய வேண்டும். 

குறிப்பாக காங்கேசன்துறை வீதியில் யாழில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும்போது வலது புறத்தில் ஓர் நிறுவனம் கம்பங்களை நாட்டி சேவை வழங்குவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே உரியவர்கள் உரிய முறையிலான அனுமதியை பெற்றுக்கொள்ளத் தவறினால் அந்த வீதியில் நாட்டப்பட்டுள்ள மின் கம்பங்களும் பிடுங்கி அகற்றப்படும். இதனால் மாநகர சபையின் எல்லைப் பகுதியில் குறித்த விடயத்தில் மாநகர சபையின் சட்டத்தினை இறுக்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a comment