மாவீரர் குடும்பங்களுக்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் உதவி செய்தமை தொடர்பாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சிடம் அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளினது குடும்பங்களுக்கு 50,000 ரூபா வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதேபோல் வறுமையில் வாடும் மாவீரர்குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரனின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக சிறீலங்கா கணக்காய்வாளர் திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது. குறித்த உதவித் திட்டங்கள் எவையும், கிராம அபிவிருத்திச் சங்கங்கள்மூலம் முன்னெடுக்கப்படாமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் பயனாளிகள் தெரிவும், வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சரினால் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.