இரணைமடுகுளத்தின் நீர் அக்குளத்தினை நம்பி வாழ்கின்ற மக்களுக்குரியதே. அப்பகுதி மக்களது தேவையை பூர்த்தி செய்துவிட்டு மிகுதியான நீரினை ஏனையோருக்கு வழங்குவதே சர்வதேச நியதியும் நியாயமாகும் என வடக்குமாகாண ஆளுநனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இரணைமடுக் குள கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் வட மாகாண ஆளுநரை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் சந்தித்துக் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை கையளித்திருந்தது. இச் சந்திப்புத் தொடர்பாக ஆளுநர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்தின் நீரானது அக்குளத்தினை நம்பி விவசாயம் செய்கின்ற, அங்கு வாழ்கின்ற மக்களுக்குரியதே. இருந்தபோதிலும் நீரினை சிக்கனமாக பாவிப்பதுடன் தமது தேவையை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு மிகுதியான நீரினை ஏனைய மக்களுக்கு வழங்குவதே சர்வதேச நியதியும் நியாயமாகும்.
மேலும் யாழ்ப்பாணத்திற்கு நீர்தேவை இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் . அனைத்து மாடங்களிலும் நீர் இருக்கின்றது. அதனை முறையாக முகாமைத்துவம் செய்தால் நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்ளமுயும்.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய குழுவொன்றினை அமைக்கவுள்ளேன். இதன் மூலம் நீரினை முகாமைப்படுத்தும் திட்டத்தை கொண்டு வருவதுடன், அது யாராலும் மாற்ற முடியாத பிரகடனமாக மாற்றுவதற்கு ஏற்றவாறு திட்டங்களை தயார்படுத்தவுள்ளேன். என்றார்.