வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கண்டி பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துக்குள்ளாகி வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையினால் குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இன்று மாலை பழைய பஸ் நிலைய கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பஸ் நிலையப்பகுதிக்குத் திரும்புவதற்கு முற்பட்டபோது பிரதான கண்டி வீதியிலிருந்து மணிக்கூட்டுக்கோபுரத்தினை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி மீது மோதியுள்ளது.
இதையடுத்து விபத்தில் வீழ்ந்த நபரைத் தூக்கச் சென்ற இளைஞன் மீது விபத்தில் கீழே வீழ்ந்த நபர் தாக்கியதில் குறித்த பஸ் நிலையப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் கள விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்தில் சேதமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களையும். பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் இளைஞனைத் தாக்கியதாக தெரிவித்த பஸ் நிலையத்திலிருந்த இளைஞர்கள் சிலரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ஒருவர் மதுபோதையிலிருந்துள்ளதாக அப்பகுதியில் நின்றிருந்த விபத்தை நேரில் கண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.