தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் ஜெனீவா மாநிலத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் தமிழ்த்தாய் இசைக்குழுவினரோடு இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களான, விடுதலைப் போராட்டத்தின் முதற் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்), தாக்குதல் தளபதி லெப்டினனட் சீலன் (ஆசீர்), வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளிஅம்மான், கப்டன் லாலா ரஞ்சன், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் ராஜா (பரமதேவா), கப்டன் பண்டிதர் (இளங்கோ), கப்டன் றெஜி, மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், லெப். கேணல் விக்டர், மேஜர் கணேஸ், லெப். கேணல் பொன்னம்மான், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம், தமிழீழத் தேசியத்தலைவரின் பெருந்தளபதி கேணல் கிட்டு, மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா போன்றவர்களின் நினைவுகள் சுமந்ததுமான இவ்வெழுச்சி நிகழ்வில் சுவிசின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ்மக்களுடன், பல நூற்றுக்கணக்கான ஜெனீவா மாநிலம் வாழ்மக்களும் அரங்கம் நிறைந்து கலந்து கொண்டிருந்தமையானது உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதுமாக அமைந்திருந்தது.
தமிழீழப் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் அத்திவாரமாய் நின்ற அடிக்கற்களின் நினைவு சுமந்த இவ் வணக்கநிகழ்வில் இரு எழுச்சிப்பாடல்களை, தமிழீழ இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்களின் இசையில் தாயகக் கவிஞர் கலைப்பருதி அவர்களின் வரிகளில்; வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு இவ்விரு எழுச்சிப்பாடல்களின் உருவாக்கத்திற்கு காரணமாகவிருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் இத்தருணத்தில் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிசில் முதற்தடவையாக நினைவுகூரப்பட்ட அடிக்கற்குள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவி வணக்கங்களோடு, சமகால கருப்பொருளை உள்ளடக்கியதான நாடகத்துடன், சிறப்புரையும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை