தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், அவர்கள் மத்தியில் பேசினார்கள். போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
500 பெண் ஊழியர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேலானவர்கள் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு பேசியதாவது:-
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசு ஊழியர்கள் கையில் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரிடம்தான் உள்ளது.
குடியரசு தினத்தன்று நாம் மீண்டும் கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்வோம். அதற்குள்ளாக ஒருங்கிணைப்பாளர்களை அரசு அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இது போராட்டம் அல்ல. அரசுக்கு நாம் வைத்துள்ள தேர்வு. இந்த தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுவார்களா? தோல்வி அடைவார்களா? என்பது அவர்கள் கையில்தான் உள்ளது.
மே மாதம் நடைபெறும் தேர்தல் முடிவு ஆட்சியாளர்களுக்கு பதில் கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் வரிசையாக சென்று போலீஸ் வேனில் ஏறி கைதானார்கள். முதலாவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், அன்பரசு, வெங்கடேசன், மாயவன், சங்கரபெருமாள் ஆகியோர் கைதானார்கள். அவர்களை தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஒவ்வொருவராக கைதாகி போலீஸ் வேனில் ஏறினார்கள். சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேரு ஸ்டேடியத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெண் ஊழியர்கள் மதிய உணவு கொண்டு வந்திருந்தனர்.
தாம்பரம் சானடோரியத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தலைமையில் சிட்லபாக்கம் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த முயன்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே 100 பெண் ஆசிரியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாதவரம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், ஜாக்டோ- ஜியோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 750-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்களை வேன்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் மறியலில் ஈடுபட்ட 400 பேரும், வேப்பூரில் மறியலில் ஈடுபட்ட 200 பேரும், திட்டக்குடியில் மறியலில் ஈடுபட்ட 400 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் சேலம், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 10 இடங்களில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சேலம் மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம் ஆகிய 8 இடங்களில் மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதே போன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மற்ற இடங்களிலும், மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்பட 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள அரசு ஊழியர் சங்கம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம் ஆகிய தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 1700 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை நகரில் மறியலில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக இன்றும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலுக்கு முயன்றனர். தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 900 பெண்கள் உள்பட 1500 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு தாலூகா அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகளை கைது செய்தனர்.
மேலும் கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.