அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநிலத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.
தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். உத்தரபிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று தெரிவித்தார்.
இதேபோல் உத்தரபிரதேசம் (மேற்கு) மாநில பொதுச்செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டு தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிரியங்கா காந்திக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.