கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான, ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் இணைந்து பங்குகொள்ளும், வரலாற்று சிறப்பு மிக்க, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
வருடாந்த திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள், இலங்கை மற்றும் இந்தாயாவிலிருந்து வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவர்களுக்கான அனைத்து வசதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடற்போக்குவரத்து, உணவு, தங்குமிடம், சுகாதாரம், படகுச் சேவைகள் உள்ளிட்ட, கச்சதீவில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பில், துறைசார் அதிகாரிகள், அரச அதிபரினால் பணிக்கப்பட்டனர்.
இன்றைய இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம், யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், படகுச்சேவை உரிமையாளர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.