சேலம் – நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

244 0

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய மாற்றத்தால் ஏற்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத்தொகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய அதிகாரிகளுக்கு வழங்கியபோல அரசு ஊழியர், ஆசியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை சேலம் மாவட்டத்தில் சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, காடையாம்பட்டி, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களின் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தலைமை தாங்கி, பேசினர். அப்போது 9- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைவரும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட தாலுகா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு உழியர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வில்லையெனில் வருகிற 25-ந்தேதி சேலம் மாவட்ட தலைநகரான கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் திரண்டு மிகப் பெரிய மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நடந்த இந்த போராட்டத்தால் அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது. உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையில் அரசு அலுவலர்கள் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.

வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களின் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு பணிகள் முடங்கியது.

இந்த போராட்டத்தையொட்டி தாலுகா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுப்பு போடப்பட்டிருந்தது.

Leave a comment