ரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் பலியாகி விட்டனர்.
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது.
அங்குள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.
அப்போது திடீரென தீப்பிடித்தது. அந்த தீ 2 கப்பல்களுக்கும் பரவியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் ஊழியர்கள், 14 பேர் பயணிகள்.
இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். இவர்கள் உயிர்பிழைக்க கடலில் குதித்த போது மரணத்தை தழுவினர்.