சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆளும், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் செயற்படவேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்க்கட்சியினருக்கு எதிரான முறைப்பாடுகளை மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
லஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்க்கட்சியினருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை மாத்திரம் விசாரணை செய்து வழக்கு தொடுக்கின்றது. அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவும் இல்லை. வழக்கு தொடுக்கவும் இல்லை. சுயாதீன ஆணைக்குழு என்று தெரிவிக்கின்றபோதும் எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கே இந்த ஆணைக்குழுக்கள் அமைத்துள்ளதாகவே தெரிகின்றது.