நாட்டில் இவ்வாண்டு தேர்தலொன்று விரைவில் நடைபெற வேண்டுமாயின் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருத்தல் வேண்டும்.
அதற்கு அடுத்து பாராளுமன்ற தேர்தல் அமையலாம். இந்த இரண்டு தேர்தல்களே தற்போதைய அரசியல் நிலையில் நாட்டுக்கு தேவையானவொன்று என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முதலில் மத்திய அரசாங்கத்தை ஸ்தீரப்படுத்திக்கொண்டு பின்னர் மாகாண சபை தேர்தலுக்கு செல்வதே உசித்தமானது என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே பலர் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் 78 ஆம் அரசியலமைப்பில் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று இல்லாவிட்டால் தனது மகனான நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவித்திருப்பார் மகிந்த. தனது குடும்பத்தவர்களிடமிருந்தே போட்டி நிலை உருவாகும் என்பதை அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
இதனால், தனது வங்குரோத்து அரசியலை மறைத்துக் கொள்ள ஒருமித்த நாடு என்ற சொல்லை பிடித்து கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்திக் கொண்டும் நாட்டு மக்களிடைய மீண்டுமொரு இன மத கலவரத்தை தோற்றுவிக்க பார்க்கின்றார். Share