ஜனாதிபதி வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!

251 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள். 

இந்நிலையில் மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை கடந்த ஆண்டு 2018 ஜனவரி மாதத்தில் ஒருதொகுதி காணி விடுவிக்கப்பட்டும் இதுவரை மக்களின் ஏனைய காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். 

இந்நிலையில் இன்று (21) முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி வருகை தந்து வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார்கள். 

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறும் தேசிய நிகழ்விற்காக ஜனாதிபதி மைத்திரிபால வருகை தரவுள்ளார். இவரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கேப்பாபுலவு போராட்ட மக்கள் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இதுவரை எந்த முடிவினையும் ஶ்ரீலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் தங்களுக்கு ஒரு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 684 நாட்களைக் கடந்த நிலையில் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள். 

இன்று (21) முள்ளியவளைக்கு வருகைதரவுள்ள மைத்திரியின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். 

Leave a comment