ரபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு தகவலையும் வெளியே விடாமல் அனைத்து விவரங்களையும் பரம ரகசியமாக வைத்துக்கொண்டு கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதிலே சொல்லாமல் “ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை” என்று பிரதமர் நரேந்திரமோடி செயற்கையாக அணிந்திருந்த “போலி பாதுகாப்பு கவசம்” குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்டுள்ள “36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்கலாம் என மோடி எடுத்த முடிவின் காரணமாக, ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41 சதவீதம் அதிகமாகிவிட்டது” என்ற நாட்டு மக்கள் நம்பி ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் நிறைந்த இயற்கையான புலனாய்வுக் கட்டுரை மூலம், “கழற்றி” வீசப்பட்டு மத்திய பா.ஜ.க. அரசின் கவைக்கு உதவாத வாதங்கள் எல்லாம் சுக்கு நூறாக நொறுக்கி வீழ்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கான ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நாட்டு மக்களுக்கு அளித்தே தீரவேண்டிய நியாயமான விளக்கத்தை அளிக்க மறுத்து, தானே தரையில் விழுந்து கும்பிட்டு மரியாதை செலுத்திய ஜனநாயகத்தின் பிரமாண்ட சின்னமான நாடாளுமன்றத்திற்கும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி முன்பே தகவல்களைச் சொல்ல முடியாது என்று எல்லாவற்றையும் மூடிமறைத்து அடாவடி செய்தது பா.ஜ.க. அரசு.
முறைகேடுகள் நிறைந்த ரபேல் ஒப்பந்தத்திற்கு யார் ஒப்புதல் அளித்தது தெரியுமா? “ஊழலை ஒழிப்பேன்” “நாட்டின் பாதுகாப்பே எனக்கு மிக முக்கியம்” “பாதுகாப்பு பிரச்சினையில் இப்படி எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டு கூறலாமா?” என்றெல்லாம் பேசி நாடகமாடி வரும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான “நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு தான் என்ற தகவலை அந்த பத்திரிகையில் படித்தபோது பேரதிர்ச்சியடைந்தேன்.
ஆனால் இத்தகையை பிரமாண்டமான புலனாய்வு கட்டுரைக்கு உரிய விளக்கத்தை அளிக்கக்கூட முடியாமல் “அனைத்திற்கும் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுவிட்டது” என்று பூசிமெழுகிய ஒரு விளக்கத்தை மட்டுமே பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமனால் கூற முடிந்திருக்கிறது.
ஆகவே இனியும் எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று வெற்று வாய்ச்சவடால் முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரசாரத்தையும் பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக கைவிட்டு பிரதமர் ஆசனத்தின் பெருமையை இப்போதாவது காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பில் பிரதமருக்கு உள்ள அக்கறையைவிட அதிகமாகவே தி.மு.க. வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால், மடியில் கனமில்லை என்ற தைரியம் இருக்கிறதென்றால் ரபேல் போர் விமான பேரம் குறித்து உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.