இராணுவத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட எழுத்து ஆவணங்கள் முரண்பட்டது என முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கமைய அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எம்.எஸ்.எம் சஹப்தீன் ரகசிய காவற்துறையினருக்கு பிறப்பித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 13 ஆட்கொணர்வு மனுக்கள் ஒரே தடவையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது உறவினர்களால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த குழுவினர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போது இரண்டு கத்தோலிக்க மதகுருமார் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சாட்சி வழங்கியதாக அவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஆர்.ஏ.ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது அவர்கள் இரண்டு பேரும் காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
தம்மால் பொறுப்பேற்கப்பட்ட தரப்பினரின் பெயர் விபரங்கள் இராணுவத்திடம் இருப்பதாக, இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தாக சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது பெயர் விபரங்களையே அவர் நீதிமன்றில் முன்வைத்ததாக முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ரகசிய காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.