சிங்களதேச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனா? விக்கினேஸ்வரனா?

392 0

eluka2எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன் மேடையேறி உரிமைகளைப் பட்டியலிட்டு உரத்துக் கேட்கிறார். பொங்கு தமிழுக்கு நிகராக உலகத் தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்ட எழுக தமிழ், எதிர்பார்த்ததற்கும் மேலாக எழுச்சி கொண்டு வெற்றி கண்டுள்ளது.நல்லூரிலிருந்தும் யாழ். பல்கலைக்கழகச் சந்தியிலிருந்தும் புறப்பட்ட பேரணிகள் முற்றவெளியில் ஒன்றுகூடி எழுக தமிழ்ப் பிரகடனம் செய்து நிறைவு செய்த காட்சி, ஏழாண்டுகளுக்குப் பின்னர் நம்பியிராத ஒன்று.

ஒவ்வொரு தமிழரும் தம் தோள்களை உயர்த்தி, நெஞ்சினை நிமிர்த்தி, ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொல்ல வைத்த நாளாக 2016 செப்டம்பர் 24ம்திகதியை காலக் கலண்டர் பதிவு செய்துள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண சபைத் தலைவர் நிகழ்த்திய பேருரை தாயகத் தமிழரின் பூர்வீகத்தை எடுததியம்பிய வரலாற்றுரை.மகாவம்சமே முழு இலங்கையின் வரலாறென்று மார்பு தட்டிக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்தர்களுக்கு, வரலாற்று உண்மையை பிய்த்துக் காட்டியது இந்த உரை.அதனாற்தான் சிங்களதேச மிதவாதிகள் ”ஐயோ – குய்யோ” என குழறிக் கொண்டு தீ மிதித்தவர்கள்போல துள்ளிக் குதிக்கின்றனர்.

விக்கினேஸ்வரன் என்பவர் யார்? அவரது மாண்புகள் என்ன? எத்துணை துணிச்சலாக தமது கருத்துகளை அவர் வெளிப்படுத்துபவர் என்பதை இவர்கள் அறிய வேண்டுமானால், உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்றபோது அவர் நிகழ்த்திய உரையையும், பதவியிலிருந்து ஓய்வுபெற்றவேளை வழங்கிய பிரியாவிடை உரையையும் ஒரு தடவை மீள்வாசிப்புக்கு உட்படுத்துவது நல்லது.தமிழ் மக்களின் இன்றைய நிலை, தொடரும் அவர்களின் இழப்புகள், அவர்களின் இன்றைய தேவைகள், அவர்கள் எதனை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பதைத்தான் முதலமைச்சர் தமது பேருரையில் குறிப்பிட்டாரே தவிர, எவர்மீதும் பண்பற்ற எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், இவ்வுரையைக் கேட்டுப் பொறுக்காத சிங்களதேச அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அவர்மீது ஏவி வரும் சொல்லம்புகளில் சிலவற்றை ஒருதடவை பார்ப்போமானால், அங்குள்ள யதார்த்தத்தை உணர்வது இலகுவாக இருக்கும்.

“விக்கினேஸ்வரனின் எழுக தமிழுக்குப் பயந்து இராணுவ முகாம்களை மூடிவிட முடியாது” – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன (இவர் ரணிலின் தாய்வழி மைத்துனர்).
“இனவாதத்தைத் தூண்டுவதே விக்கினேஸ்வரனின் வேலை” – ஜே.வி.பி. தலைவர் ரில்வின் சில்வா.
“எங்கள் ஜனாதிபதிக்கு விக்கினேஸ்வரன் உத்தரவிட முடியாது” – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
“விக்கினேஸ்வரனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவறினால் பேராபத்து ஏற்படும்” – ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்பன்பில எம்.பி.
“வடமாகாண முதலமைச்சரின் பேச்சை உடனடியாக அரசாங்கம் கண்டிக்க வேண்டும்” – மகிந்த அமரவீர எம்.பி.
“விக்கினேஸ்வரனையிட்டு தெற்கு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்”- மகிந்த ராஜபக்ச எம்.பி.
“விக்கினேஸ்வரனுக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்குமிடையே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” – எஸ். எம். மரிக்கார் எம்.பி.
“தமிழ் மக்களை மீண்டும் போருக்கு இட்டுச் செல்கிறார் விக்கினேஸ்வரன்” – ஜாதிக ஹெல உறுமய அமைப்பாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க.
“குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட விக்கினேஸ்வரனின் உரையை எவரும் கருத்தில் எடுக்கக்கூடாது” – அமைச்சர் மகிந்த சமரவீர.
“விக்கினேஸ்வரனை இன்னமும் ஏன் கைது செய்யவில்லை” – மனு~ நாணயக்கார எம்.பி.
“விக்கினேஸ்வரனை ஜனாதிபதி கடுமையாக எச்சரிக்க வேண்டும்” – மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி.
“விக்கினேஸ்வரனின் சமஷ்டிக்கான கருத்து இனவாதத்தைத் தூண்டுவது” – தேசிய பிக்குகள் முன்னணி.
“விக்கினேஸ்வரனையும் எழுக தமிழ்காரரையும் தமிழகத்துக்கு நாடு கடத்த வேண்டும்” – பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர். (இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் தம்மோடு ஞானசார தேரரையும் தமிழகத்துக்குக் கூட்டிச்செல்லப் போவதாகக் கூறியிருப்பது சம்பந்தா சம்பந்தமில்லாதது).
“எழுக தமிழ் பேரவைக்கும் கூட்டணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” – எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. (அப்படியானால் கூட்டமைப்பின் பங்குக் கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியோர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை).
“நாம் எதனைக் கோருகின்றோமோ அதனைத்தான் பேரணியும் கோரியது. பேரணியால் கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” – வடமாகாணசபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம். (விழுந்தும் மீசையில் மண் படவில்லை கதைதான்).
“எழுக தமிழ் பிரகடனம் நியாயமானது. முதலமைச்சரின் முயற்சிக்கு முழு மலையகமும் ஆதரவளிக்க வேண்டும்” – ஊவா மாகாண முதலமைச்சர் செந்தில் தொண்டமான். (இவரது பாட்டனாரான சௌமிய மூர்த்தி தொண்டமான் தமிழர் ஐக்கிய கூட்டணி ஆரம்பமானபோது அதனை ஆதரித்து அதன் இணைத் தலைவரானதும், பின்னர் காலை வாரிவிட்டுக் கழன்று சென்றதும் மறக்க முடியாதது).

எழுக தமிழ் தொடர்பாக தெற்கில் நிலவும் அரசியல் காலநிலையைப் பார்ப்பதற்கு இவைகள் போதும். இவ்வேளையில் இதன் பின்னணி தொடர்பான சில அம்சங்களை நோக்குவது அவசியம்.
கூட்டமைப்பின் தலைமைக் கட்சியெனச் சொல்லப்படும் தமிழரசுக் கட்சி ஆரம்பத்திலிருந்தே எழுக தமிழை எதிர்த்து வந்தது. பேரணியை நிறுத்துமாறு சுமந்திரன் அதன் ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவே கேட்டிருந்தார்.
ஆனால், மக்கள் எழுச்சி தமிழரசின் விருப்பத்தை முறியடித்துவிட்டது. அக்கட்சியின் உபதலைவரான பேராசிரியர் சிற்றம்பலம் பேரணியில் கலந்து உரையும் நிகழ்த்தினார்.

பேரணியின் வெற்றி தமிழரசுக் கட்சியின் முகத்தில் பூசப்பட்ட முதற்கரி. தமிழரசுக் கட்சியினர் மக்கள் விருப்புக்கேற்ப தங்கள் போக்கை மாற்றத் தவறின் கரிப்பூச்சு தொடரும் சாத்தியமே அதிகம்.எழுக தமிழுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் எதிராக தமிழரசுக் கட்சியினர் பகிரங்கமாகச் செயற்பட்டதே, சிங்கள தேசம் துணிச்சலாக முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்துவதற்கு உயிரூட்டுவதாக அமைந்தது. இதனைத் தமிழரசு கட்சியினர் விரும்பியே செய்கின்றனர்.எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன் மேடையேறி உரிமைகளைப் பட்டியலிட்டு உரத்துக் கேட்கிறார்.

விக்கினேஸ்வரனின் நடவடிக்கைகளில் மைத்திரியும் ரணிலும் ஏற்புடையவர்களல்லவாயினும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு சர்வதேசம் அவர்களின் கைகளைக் கட்டிவைத்துள்ளது.நல்லெண்ணம் – நல்லாட்சி| என்ற சூத்திரத்துக்கு உலக அரங்கில் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.எதிர்கட்சித் தலைவராக அப்பதவியில் இருப்பவர் தமது கடமையைப் பொறுப்புணர்வுடன் செய்யாது அரசுக்குச் சாமரை வீசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு மாகாணத்தின் முதலமைச்சராக இருப்பவர் இனம்சார் செயற்பாடுகளின் முழுப்பொறுப்பையும் தம் தலைமீது சுமந்து களத்தில் இறங்கியிருப்பதால், பலத்த கண்டனத்தை எதிர்கொள்கிறார்.சிங்கள பௌத்த மிதவாதிகள் சம்பந்தனை ஓரம் தள்ளிவிட்டு, முதலமைச்சர் விக்கினேஸ்வரனையே இப்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பார்க்கின்றனர் என்பதே உண்மையான உண்மை.

பனங்காட்டான்.