சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி கருத்து கூற முடியாது. சினிமாவில் நடித்ததால் நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாமே கதையாக தெரிகிறது. கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. கோடநாடு பிரச்சினையில் முதல்வருக்கு துளி கூட சம்பந்தம் இல்லை.
அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல விஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது.
கஜா புயலின்போது தமிழக அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், இதனை அனைவரும் பாராட்டினார்கள்.
ஆனால் தி.மு.க. பாராட்டவில்லை. குற்றம் சொல்லியே பேர் வாங்கவேண்டும் என்ற பட்டியலில் மு.க.ஸ்டாலின் உள்ளார். மேலும் கூட்டணி பற்றி முதல்வர், துணை முதல்வர், தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள், கற்பனையான, ஊர்ஜிதம் இல்லாத தகவலுக்கு கருத்துக்கூற முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆரம்பத்தில் ஆணை கொடுக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை, இனிமேல் மேல்முறையீடு செய்து உத்தரவு வாங்கும்போது போட்டிகள் நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.