மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினமான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்ததும், வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் 800 வீரர்கள், 900 காளைகள் பங்கேற்றுள்ளன.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்படுகிது. ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.