காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் சிதறு தேங்காய் போல் சிதறுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் 138-வது வார்டில் பா.ஜனதா சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 100 பெண்கள் பொங்கலிட்டனர். பா.ஜனதா நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பிரேம் ஆனந்த் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியை டாக்டர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைப்பதாகவும், ராகுல்தான் பிரதமர் என்றும் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதன் முதலில் அறிவித்தார். அறிவித்த உடனேயே எதிர்ப்பும் தொடங்கி விட்டது.
இப்போது காங்கிரசை ஓரம்கட்டிவிட்டு உத்தர பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரசுக்கு இடமில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
அவர்களுக்கு மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாகவில்லை. உடைந்து சிதறி வருகிறது. சிதறு தேங்காய் போல் நாடு முழுவதும் சிதறுகிறது.
காங்கிரசும், கம்யூனிஸ்டும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன. தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? அவர்களுக்குள்ளும் முரண்பாடு இருக்கிறது.
தேசிய அளவில் பா.ஜனதா தலைமையிலான அணிதான் மெகா கூட்டணியாகவும், வெற்றிக்கூட்டணியாகவும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.