சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்தார்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அவர்கள் நாட்டின் பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர்.
அவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.
இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற்றால், அது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்பதால் டிரம்பின் சொந்த கட்சியிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த விவகாரத்தில் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பதவி விலகினார். மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் டிரம்ப் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தின.
அதனை தொடர்ந்து, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை உடனடியாக திரும்பப் பெறப்போவதில்லை என்று டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதே போல் சிரியாவில் உள்ள குர்து இன மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் சிரியாவில் இருக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் தெரிவித்தார்.
ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்கள் தங்களுடைய நாட்டுக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர வேறு எந்த விஷயங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிக்கவில்லை” என தெரிவித்தார்.
அதே சமயம் அமெரிக்க படை வீரர்கள் எந்தெந்த இடங்களில் இருந்து எப்போது புறப்படுகிறார்கள் என்பது குறித்து அவர் விரிவாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹசாகே மாகாணத்தின் மிலான் ராணுவ தளத்தில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறி வருகிறார்கள். டிரம்பின் அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க படைகள் சிரியாவில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.