அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது.
இதற்கிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் ஒரு தரப்பிரனருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியில் தனிப்பட்ட குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது எனவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இதே பிரச்சினை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரித்தபோது அலங்காநல்லூர் விழா கமிட்டியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 35 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 3 இடங்களில் வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடந்தது. அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முன்பதிவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அலங்காநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் 10 டாக்டர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தகுதியில்லாதவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.
தேர்வான இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். மாடுபிடி வீரர்கள் முன்பதிவையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு நாளை (13-ந் தேதி) நடக்கிறது. அலங்காநல்லூரில் 21-ந் தேதி காளைகளுக்கான பதிவு நடக்கிறது. #