பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம், வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள், விவேகா, மஞ்சு மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகியோர் கடல் அலையில் மூழ்கி உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிறுவன் ஜெயசூர்யா கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி மகன் செல்வன் ரிஷோர் மற்றும் செல்வன் மகன் செல்வன் சந்தியாகு ராயப்பன் ஆகிய இருவரும் கடலில் குளிக்கச் சென்ற போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உச்சப்பா மகன் ராஜப்பா தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் கணேசன் பனைமரத்தில் பதநீர் சேகரிக்க ஏறும் போது மரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், புளியமரத்துக்கோட்டை கிராமம், கோடாங்கி பட்டியைச் சேர்ந்த மோகன சுந்தரம் மகள் சிறுமி சபீதா கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த சுமதி தன் இடுப்பில் வைத்திருந்த கைக்குழந்தை தீபிகாவுடன் காப்பாற்ற முயன்றபோது மூவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த திருமால் மகன் அய்யாவு தென்னை மரம் ஏறும் போது, கடந்தைகள் கொட்டி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், முல்லையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் கீர்த்தனா குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.
பொன்னமராவதி வட்டம், செவலூர் விளக்கு அருகில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமன் மகன் பால சுப்பிரமணியன் மற்றும் திரு. செல்லையா மகன் வினோத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.