சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பெண்கள் கைது

305 0

சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 1.30 மணிக்கு கேத்வே பசிபிக் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது.

அந்த விமானத்தில் இருந்து இறங்கிய சுமார் 200 பயணிகளை நுண்ணறிவு பிரிவினரும், சுங்கத் துறையினரும் கண்காணித்தனர்.

பயணிகளில் சுங்கத் தீர்வை கட்டுவதற்குரிய பொருட்களை கொண்டு வந்தவர்கள் அதற்குரிய இடத்துக்கு சென்று வரிசையில் நின்றனர். சுங்கத்தீர்வை கட்டும் அளவுக்கு பொருட்களை கொண்டு வராத சாதாரண பயணிகள் மற்றொரு பாதை வழியாக வெளியே புறப்பட்டு வந்தனர்.

பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே புறப்பட்டு சென்றனர். அப்போது சுங்கத்தீர்வை கட்டாமல் வரும் வழியில் 2 கொரியா பெண்கள் வந்தனர். அவர்களிடம் சிறிய அளவில்தான் உடமைகள் இருந்தது. இருவரும் டிப்- டாப்பாக உடை அணிந்து இருந்தனர்.

2 கொரியா பெண்களும் ஒரே மாதிரி உடை அணிந்து இருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆனால் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் உடமைகளில் எந்த பொருட்களும் இல்லை. அவர்களது உடை மட்டுமே இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர்.

அப்போது 2 கொரியா பெண்களும் சுற்றுலா விசாவில் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களை புறப்பட்டு செல்லும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அந்த 2 பெண்களும் புறப்பட்டு செல்லும்போது அவர்களது நடவடிக்கைகளில் சுங்கத்துறையினருக்கு மீண்டும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பெண் அதிகாரிகள் மூலம் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கொரியா பெண்கள் விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களது உடைகளை களைந்து பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2 பெண்களும் தங்களது ஆடைக்கு உள்ளே மற்றொரு மினி ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது. அந்த ஆடைக்குள் ஏராளமான சிறு சிறு பைகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தது. அந்த பைகளுக்குள் தங்க கட்டிகள் இருந்தன.

மினி உள்ஆடையின் முன்னும் பின்னும் அந்த தங்க கட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெண்ணும் தலா 12 கிலோ எடை உள்ள தங்க கட்டிகளை அந்த ஆடைக்குள் மறைத்து வைத்து இருந்தனர். அந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 24 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினரும், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அந்த தங்க கட்டிகள் சர்வதேச அளவில் கடத்தலுக்கு பயன்படும் தங்க கட்டிகள் என்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 8½ கோடியாகும்.

அந்த தங்க கட்டிகளை 2 கொரியா பெண்களும் திட்டமிட்டு கடத்தி வந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். ஹாங்காங்கில் இந்த தங்க கட்டிகளை கொடுத்தது யார் என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்தனர்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்த பெண்கள் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக அவர்கள் வைத்திருந்த பாஸ்போர்ட்டை வாங்கி மீண்டும் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்கள் அடிக்கடி ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்து சென்று இருப்பது தெரிந்தது.

அந்த பாஸ்போர்ட் விவரங்களை மேலும் ஆய்வு செய்தபோது 2 கொரியா பெண்களும் சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் இருந்து சென்னையில் உள்ள யாரோ ஒரு தொழில்அதிபருக்காக இந்த தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அதற்கு இந்த 2 பெண்களும் கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் சென்னையில் யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது என்பதை 2 கொரியா பெண்களும் சொல்லவில்லை. அவர்களிடம் இன்று காலை 10 மணிவரை விசாரணை நடத்தியும் புதிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சுங்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பும் 2 பெண்களும் பல கோடி ரூபாய் தங்கத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இதுவரை ஹாங்காங்கிலும், சென்னையிலும் சிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்களது உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்தது ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹாங்காங் விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனர் கருவிகளில் இவர்கள் சிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விமான நிலையங்களில் ஒவ்வொருவரது உடலையும் நன்கு பரிசோதித்த பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிப்பார்கள். இந்த சோதனையில் 2 பெண்களும் தப்பியது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹாங்காங் விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துணையுடன்தான் இவர்கள் இந்த தங்க கட்டி கடத்தலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 


Leave a comment