பெருந்தோட்ட கம்பனிகளின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழில், தொழில் சங்க உறவுகள் மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
பொருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க முடியாது என குறிப்பிட்டு வந்த பெருந்தோட்ட கம்பனிகள் இன்று 625 ரூபாவை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் இந்த தொகையினை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று தற்போத 25 ரூபாவாக அதிகரித்துள்ளதை போன்று தவணை அடிப்படையில் அடிப்படை சம்பளத்தொகை அதிகரிக்கப்படுமென்றும் அடுத்த வருடம் 650 ருபாவாகவும் அதற்கு அடுத்த வருடம் 675 ருபாவாகவும் எதிர்பார்த்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு மாறாக முதல் வருடம் 650 ரூபாவாகவும் அதற்கு அடுத்த வருடம் 700 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுமானால் கோரிக்கைக்கு சாதகமான தீர்வினை பெற்றுக்கொள்ள கூடியதாக அமையும். இதனையே கலந்துரையாடல்களின்போதும் தொழிற்சங்கங்கள் வலியுருத்தியுள்ளன.
இந்த தொகையினை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அனைவருடனும் கலந்துரையாடி பின்னர் மிக விரைவில் முதலாளிமார் சம்மேளனத்துடனான அடுத்த கட்ட போச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றார்.