ரவிராஜ் கொலை சம்பவம்; மேன்முறையீடு 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு

266 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் தாக்கல் செய்துள்ள இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அசல வெங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக அத செய்தியாளர் கூறினார். 

வழக்கில் பிரதிவாதியான பிரசாத ஹெட்டியாரச்சி என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கான நோட்டீஸை இதுவரை ஒப்படைக்க முடியவில்லை என்று மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

அதன்படி இந்த வழக்கு இம்மாதம் 30ம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூரிகள் சபையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கடற்படை வீரர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று இந்த மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment