மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட, 12 நகரங்களில், தமிழ்நாடு மின் வாரியம், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைத்துள்ளது. இந்த நகரங்களில் வசிப்போர், ‘1912’ என்ற எண்ணில், மின் தடை குறித்து புகார் அளிக்கலாம்; அது, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பழுது சரி செய்யப்படும். இந்நிலையில், மத்திய நிதியை பயன்படுத்தி, மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இதில், 110 நகரங்களில் வசிப்போர், மின் தடை, மீட்டர் பழுது, புதிய மின் இணைப்பு தாமதம் உள்ளிட்டவை தொடர்பாக, புகார் அளிக்கலாம்.இந்த மையம், சென்னை, மின் வாரிய அலுவலக
வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது; ஆனால், இதுவரை செயல்பாட்டுக்கு வராவில்லை.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கணினி மையத்தில் பெறப்படும் புகார் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். ஆனால், நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்படும் புகார், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்; இதனால், நுகர்வோரின் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய சேவை மைய பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; விரைவில், செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
உணவு வழங்கல் துறை, பொது வினியோக திட்ட புகார்களுக்கு தீர்வு காண, சேவை மையம் துவக்கியுள்ளது. அதில், ‘1967’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த மையம் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கி, தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்பது நிரூபணமாகிஉள்ளது.