பொதுமக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்கியது ஏன்?

290 0

திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியில் இருந்து குன்னத்தூர், புதூர், பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். 

இதுதொடர்பாக அச்சம்பட்டி கிராமத்தில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

காலை 10 மணிக்கு மேல்தான் அரசு அதிகாரிகள் பணி செய்வார்கள் என்ற நிலையை மாற்றி 24 மணி நேரமும் செயல்படும் அரசு தான் அம்மாவின் அரசு என்பதை நிரூபித்து காட்டும் வகையில் இந்த இரவு நேரத்திலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

யாரோ ஒரு புண்ணியவான் வழக்கு போடுகிறார்? ஏழைகளுக்கு கொடுப்பதில் அவருக்கு என்ன வயிற்றெரிச்சல் என்று தெரியவில்லை. கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளன. வீடுகளை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் கஜா புயலால் உருக்குலைந்து விட்டன. அந்த மக்கள் எப்படி பொங்கல் கொண்டாடுவார்கள்? பொங்கல் கொண்டாடுவதற்கு யாரிடம் போய் உதவி கேட்பார்கள்?

இன்றைக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்படுகின்றன. அவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பானையில் பொங்கல் பொங்கும்போது மக்களின் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

மறைந்த முதல்- அமைச்சர் அம்மா அவர்களும் பொங்கல் பரிசாக ரூ.100 தந்தார்கள். அன்றைக்கு விலைவாசி அப்படி. இன்றைக்கு ரூ.100 கொடுத்தால் சிறு பிள்ளைக்கூட கேள்வி கேட்கிறது?.

மக்கள் நலன்பேனும் அம்மாவின் அரசுதான் ரூ.1000 பொங்கல் பரிசை உங்களுக்கு தந்துள்ளது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள். இங்கே பொங்கல் பரிசு பெறுபவர்கள் ரூ.1000 ரொக்கத்தை பிரதமர் மோடி தருவதாக நினைக்கிறார்களாம். அப்படி அல்ல. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் தருகிறார்.

இதனை பொதுமக்களிடம் விளக்கி சொல்ல வேண்டியது இருக்கிறது. எனவே தான் பொங்கல் பரிசு கிராம மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நேரில் வந்து கொடுத்து வருகிறோம். கிராம மக்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள். இதனால் இரவானாலும் மக்களுக்கு பொங்கல் பரிசை அதிகாரிகள் ஆர்வத்துடன் வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். 

Leave a comment