கர்நாடகா – தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி, காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுவதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காகவும் தேவைப்பட்டால் இருமாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது மோதல் என தகவல் வந்தால், அமைதியை ஏற்படுத்த உண்ணா விரதம் இருப்பேன் என்றார்.
மேலும், இரு மாநிலங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளன. இதனை இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்காக மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என உமாபாரதி தெரிவித்துள்ளார்.