ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மின்சார வயரைக் கடித்து இறந்துவிட்டதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதை ஏற்க மறுத்த அவரது தந்தை பரமசிவம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் மேலும் ஒரு மருத்துவரைக் குழுவில் இடம்பெற உத்தரவிட்டது.
அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்றும் கெடு விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர், 5 பேர் அடங்கிய டாக்டர்கள் குழுவில் இடம்பெறுவார் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பரமசிவம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவில், ‘கடந்த ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினர் விரும்பும் மருத்துவர் ஒருவரை இடம்பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கடந்த 95-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்து ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவும் தவறானது.
எனவே, அந்த உத்தரவை ரத்து செய்வதுடன், தனியார் மருத்துவர் ஒருவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
நம்பிக்கை இல்லையா?
இம்மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் அருண் மிஸ்ரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தனியார் மருத்துவரைக் கோருவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர். அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லையா? அவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யத் தகுதி இல்லையா என்று விளக்கம் கேட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், ‘அரசு மருத்துவர்கள் தமிழக அரசின் கீழ் பணியாற்றுபவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடக்க வாய்ப்புள்ளது. ராம்குமார் சிறையில் வயரைக் கடித்து இறந்தாரா அல்லது சிறைக்காவலில் நடந்த மரணமா என்ற உண்மை தெரியாமலே போய்விடும்’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ‘ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒரு மருத்துவரால் என்ன செய்ய முடியும்? தனியார் மருத்துவரை அனுமதித்தால் தவறான பழக்கமாகிவிடும்’ என்று கூறி, கோரிக்கையை நிராகரித்தனர். இதையடுத்து, பரமசிவம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப்பெறப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவர் இன்று சென்னை வருகை
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராம்குமாரின் தந்தை தெரிவித்ததால், அவரது கோரிக்கையை ஏற்று ராம்குமாரின் உடலை செப்டம்பர் 30-ம் தேதி வரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும், அதுவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராம்குமாரின் தந்தை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதால், நாளை (1-ம் தேதி) ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் இன்று சென்னை வருகிறார்.
மனித உரிமை ஆணைய சுற்றறிக்கையில், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்து ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.