காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

355 0

201609240814220059_tn-appeal-against-cauvery-management-board-order-in-sc_secvpfகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத் தில் இன்று விசாரணைக்கு வரு கிறது. அப்போது உச்ச நீதிமன்ற‌ தீர்ப்பை மீண்டும் மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 20-ம் தேதி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27-ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30-ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டது.

கர்நாடக முதல்வர் சித்த ராமையா கடந்த புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம், அமைச் சரவை கூட்ட‌த்தை கூட்டி உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோ சித்தார். இதையடுத்து கர்நாடகா வில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இரு மாநில பிரதிநிதி களின் கூட்டத்திலும் கர்நாடகா இதே கருத்தில் பிடிவாதமாக இருந்தது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக த‌மிழகம் மற்றும் கர்நாடகா தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது காவிரி மேற்பார்வை குழு முடிவுக்கு எதிரான இரு மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மாற்றம் கோரிய கர்நாடக அரசின் மனு, இரு மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அப்போது த‌மிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு புகாரை தெரிவிப்பார் என தெரிகிறது. எனவே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைப் பிடிக்கும் கர்நாடக அரசு மீது நீதிபதிகள் எத்தகைய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லியில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

க‌ர்நாடகாவில் பலத்த பாதுகாப்பு

காவிரி வழக்கில் இன்று முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதால் கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே பெங்களூரு, மைசூரு, மண்டியா நகரங்களிலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைப் பகுதிகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் பெங்களூருவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சிவாஜிநகர், விவேக்நகர், அல்சூர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட‌ இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.