மலையகத்தில்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள் (காணொளி)

641 0

up-country-protested
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
பத்தனை போகாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் நாவலபிட்டி – தலவாகலை பிரதான வீதியை மறித்து சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.

 
தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வட்டவளை டெம்பள்ஸ்டேவ் தோட்டத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியை மறிந்து ரொசல்ல பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையிலான கோஷங்களை எழுப்பியவாறு இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், வனராஜா தோட்டத் தொழிலாளர்களும் இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தர முதலாளிமார் சம்மேளனமும், தொழிற்சங்கங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டிக்கோயா – பட்டல்கலை தோட்டத் தொழிலாளர்களும் ஹட்டன் டயகம வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர்.

 
ஹட்டன், தரவளை, சலங்கந்தை, இன்வெரி, ஒட்டரி, எட்லி, மாணிக்கவத்தை, போடைஸ், பட்டல்கலை, என்சி ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 
தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து 17 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதத்தில் தமக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
காலம் தாழ்த்தாமல் தமக்கான சம்பளத்தை உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்த தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது.