கோத்தாவே லசந்தவை படுகொலை செய்தார் -ரஞ்சன்

337 0

ஊடகவியலாளர் லசந்த விக்கிமதுங்கவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே படுகொலை செய்தார் என்பதை அறிந்திருந்தும் கூட அவரை ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கின்ற நகைப்பிற்குரிய நாடாக எமது நாடு மாறியிருக்கின்றது என நெடுஞ்சாலை, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

பணம், அதிகார பலம், பிரபுக்கள் பின்னணி போன்றவற்றால் உண்மை மறைக்கப்பட்டாலும் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை படுகொலை செய்தவர் யாரென்று உலகம் அறிந்திருப்பதை போன்று, லசந்தவை கொன்றவர்கள் யார் என்பதை நாட்டில் பெரும்பான்மையானோர் அறிந்தேயிருக்கின்றார்கள் 

சண்டே லீடர் பத்திரிகையில் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்புபட்டிருந்த மிக் விமான கொள்வனவு பற்ற லசந்த எழுதியிருந்தார். லசந்த கொலை குறித்து பி.பி.சி ஊடகம் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பிய போது அவருக்கு அதிக கோபம் ஏற்பட்டது. ‘யார் லசந்த? யார் லசந்த தொடர்பில் அறிந்திருக்கிறார்கள்?” என்ற விதத்திலேயே அவர் பதிலளித்தார். அவருடைய கோபம் மற்றும் எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடைப்படையில் லசந்தவின் கொலையுடன் கோத்தாபய ராஜபக்ஷவே தொடர்புபட்டுள்ளார் எனக் கருதுகின்றேன். 

லசந்தவை கோத்தாபய ராஜபக்ஷ தான் படுகொலை செய்துள்ளார் என அறிந்திருந்தும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கும் நகைப்பிற்குரிய நாடாக எமது நாடு மாறியிருக்கின்றது என்றார்.

Leave a comment