விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்படுகிறது!

231 0

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன.
இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது. அதாவது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 4, 5, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதத்துக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தனி அதிகாரி


சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குமரகுருவும், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
இதனை பரிசீலித்து, விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

33-வது மாவட்டம்


தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்டம் என்ற சிறப்பை பெற்ற விழுப்புரம் மாவட்டம், 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி தென்ஆற்காடு மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமானது. முதலில் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டமாக பெயர் மாறியது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 34 லட்சத்து 58 ஆயிரத்து 873 ஆகும். இந்த மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் உள்ளன.
புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படுவதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.
மெட்ரோ ரெயில் திட்டம்
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் பேசுகையில் கூறியதாவது:-
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் மாதவரம் முதல் ஓ.எம்.ஆர். சாலை சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் என 3 புதிய வழித்தட பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில், 52 கி.மீ. நீளத்திலான முன்னுரிமை வழித்தடப் பகுதிகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்குகிறது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
கோயம்புத்தூர் நகருக்கும் மெட்ரோ ரெயில் பணிகளுக் கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
அணை பாதுகாப்பு மசோதா
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்று தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட உத்தேசித்துள்ள திட்டத்தை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டுக்கான உரிமை நிலை நிறுத்தப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு மற்றும் மேகதாது ஆகிய பிரச்சினைகளில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டும், சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.
பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம்
சுற்றுச்சூழலை மேம்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற தமிழ்நாட்டை உருவாக்கி தரும் வகையில், அ.தி.மு.க. அரசு இந்த மாதம் 1-ந் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. இத்திட்டத்திற்கான நோக்கத்தினை நிறைவேற்ற வணிகர்களும், மக்களும் முழு ஒத்துழைப்பு தர தொடங்கிவிட்டனர்.
இது தொடர்பாக, அரசு தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோரிடம் இருந்தும், அதை இருப்பில் வைத்துக்கொள்வோரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு தகுந்த அளவில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதையும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேற்கண்டவாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a comment