அறுநூறே அடிப்படை சம்பளம் – நவீன்

253 0

தோட்டத்தொழிலாளர் சம்பள பிரச்சினை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க முடியாது, 600 ரூபா அடிப்படை சம்பளமே வழங்க முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில்  அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் நேற்று  மாலை பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

நான் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேசி தொழிலாளர்களுக்கு சாதாரண தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சினையில் தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறித்த தொழில் துறையை வீழ்ச்சிபாதைக்கு கொண்டுசெல்ல முடியாது. தொழிலாளர்களுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதில் நியாயமான தீர்வினை இரண்டு தரப்பினருக்கும் ஏற்றால் போல் பெற்றுகொடுக்கப்பட வேண்டும்.  

தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் உக்கிரம் அடைந்த போதிலும் அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது போனது. எனினும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தாலும் கூட தோட்டத்  தொழிலாளர் பிரச்சினைக்கு துரித கதியில் இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 

நானும், ஜனாதிபதியும், பிரதமரும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் உறுதியாக உள்ளோம். 

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாது. தொழிற்சங்கவாதிகளுக்கு இதனை வெளிப்படையாக கூற முடியாவிட்டாலும் இதுதான் உண்மை. இம்முறை 17 வீதம் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளளோம்.  

அடிப்படை சம்பளமாக 600 ரூபாவுடன் ஏனைய கொடுப்பனவுகள் அடங்களாக 940 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  கம்பனிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க போனால் பெருந்தோட்டத்துறை  வீழ்ச்சியடையும் என்றார். 

Leave a comment