நாட்டில் தற்போது தேசிய அரசாங்கம் என்றவொன்று இல்லை. ஆகவே அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 விட அதிகரிக்க முடியாது. அதனை மீறி அமைச்சுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் அது சட்டவிரோதமானது. எனவே அமைச்சரவை நியமனங்களில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைக்கு பொது தேர்தலே நிரந்தர தீர்வாக அமையுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் தற்போது தேசிய அரசாங்கமே நாட்டில் நிலவுவதாக ஐக்கிய தேசிய கட்சி பொய் தர்க்கங்களையே முன்வைத்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிட்டதால் ஒரு போதும் அந்த கட்சியை தனிகட்சியாக கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு வஜிரஸ்ராமய விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.